Sri Sri Karai Siddhar School of Mental Callisthenic

சமர்ப்பணம்

சத்குரு மகான் ஸ்ரீ ஸ்ரீ காரைச் சித்தர் பாரதத்தில் அவதரித்து வாழ்ந்த கால கட்டத்தில் அவருடன் வாழ்ந்த அன்பர்களிடமிருந்து வெளிப்பட்ட விஷயஞானத்தினையும், சித்தர் இப்பூவுலகைவிட்டு மறைந்த பின்னர், குரு ஸ்ரீ ஸ்ரீதரன் அவர்களிடம் தன்னை வெளிக்காட்டிக் கொண்டு அருளிய மெய்ஞானத்தையும் ஒன்று திரட்டி இப்புவி மாந்தர் பயனுற இயம்பும் முயற்சியே இவ்வலைத்தளம்.

இம்முயற்சியில், திருமதி S.அம்புஜம்மாள் வெளியிட்டுள்ள புத்தகத்தில் காணப்படும் சில நிகழ்ச்சிகளும், பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. மற்றும், குரு ஸ்ரீ ஸ்ரீதரன் அவர்களிடம் நேர்காணல் நடத்தி திரு. திருஞானசம்பந்தன் வெளியிட்ட “ஸ்ரீ காரைச் சித்தரும் கனகவைப்பும் ஓர் அறிமுகம்” என்ற படைப்பிலிருந்தும் சில பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவர்களை வணங்கி எம் உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்து ஆசியையும் வேண்டுகிறேன்.

“கங்கைகொண்டான் மூலியது கனக வைப்பாம்
கர்மமெலாம் போக்கிவிடும் கருவூலங் காண்”

என்று கர்மம் போக்கும் “கனக வைப்பு” அருளிய சத்குரு மகான் ஸ்ரீ ஸ்ரீ காரைச் சித்தரின் பொற்ப் பாதங்களை பணிந்து, குருவருளால் விதியை வெல்லும் மார்க்கமும் வினையை மறுக்கும் நெறிகளும் சித்தரால் நமக்கு அருளப்பட வேண்டும் என வேண்டிப் பணிகிறேன்.

சத்குரு ஸ்ரீ ஸ்ரீ காரைச் சித்தர்

குரு ஸ்ரீ ஸ்ரீதரன்

குருவின் ஒலிப்பதிவுகளையும், கனக வைப்பின் பிரதியையும் எமக்குத் தந்தருளிய CHB-களுக்கு எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். CHB (Closely Held Brotherhood) என்று அன்போடு எம்மை அரவணைக்கும் குரு ஸ்ரீ ஸ்ரீதரன் அவர்களின் திருவடியை வணங்குகிறேன்.

செவியுடையோர் கேட்கட்டும், மதியுடையோர் கிரகிக்கட்டும் என்ற தத்துவத்தைத் தான் கனக வைப்பு அடிப்படை ஆதாரமாகக் கொண்டுள்ளது. கனக வைப்பு காலத்தால் அழிந்துவிடக் கூடாது என்ற குருவின் முயற்சியை சித்தர் ஏற்று, எமது இவ்விணையதளப் பதிப்பின் கோரிக்கையை சித்தர் ஒர் அற்புத சித்து விளையாட்டின் மூலம் ஆசிகூறினார். அவர் அருளிய கனக வைப்பு, அவர்தம் ஆசி பெற்று, இவ்வையகம் வளமும் நலமும் பெற இவ்வலைதளத்தில் பதிவு செய்கிறேன். இதனில் எதனையும் வர்த்தகத்திற்காக பயன்படுத்தாதீர்கள் என வேண்டுகிறேன். அனைவரும் நலம் பெற விரும்புகிறேன்.

இம்முயற்சியில் குற்றங்கள் குறைகள் இருப்பின் அடியேனை மட்டுமே சேரும், பிழை பொறுத்தருள வேண்டுகிறேன். இம்முயற்சியின் நற்ப்பலன்கள் அனைத்துமே, குருவின் திருவடிகளிலும், சித்தரின் திருவடிகளிலும் சமர்ப்பிக்கிறேன்.

அடியேனை ஆட்கொண்ட சித்தரின் பாதம் போற்றி போற்றி போற்றி – சுரேஷ்

வருக